Thursday, May 03, 2007

நீளும் உன் கரங்கள் நிஜமென…



நீளும் உன் கரங்கள் நிஜமென…
**************************************

நீளும் உன் கரங்கள்
நிஜமென நம்பி…

இதோ…
கார்மேகத்தின் ஓரம் கிழித்து
பார் நனைக்கும்
மழைத் துளிபோல்
உன் மேல்
விழுந்து கொண்டிருக்கின்றேன்!

பிறக்கும் போதே
அதிஷ்டங்கள் யாவும்
அடியோடு அறுக்கப்பட்டு
சாபங்களை மட்டுமே
தலையில் சுமந்தபடி…

இது
நீ வாங்கி வந்த வரம்!

அன்பு…
பாசம்…
நேசம்…
அரவணைப்பு…
அத்தனையும்
அடியோடு அறுக்கப்பட்டவளாய்…

இது
நான் வாங்கி வந்த வரம்!

ம்…!
பசியின் கொடூரமும்
உணவின் தேவையும் உணர்ந்த
பிச்சைக்காரனைப் போல்…

உண்மையான நேசத்தின் தேவையும்
நெஞ்சம் தேடும்
பாசத்தின் தவிப்பும்
உன்னாலும் என்னாலும் மட்டுமே
உண்மையாய் உணர முடியும்!

ம்…!
உன் தலை சாய்த்துக் கொள்ள
தக்க தருணங்களில்
அன்புத் தாயாய் நான்
என் சேயாய் நீ!

சோகங்கள் வாட்டும் போது
தோள் சாய்ந்து கொள்ளவும்
ஊடல்கள் கொண்டு
உன் உயிரை
உருக்கிப் பிழிந்தாலும்
என் உயிரின் கடைசித் துளி
என்னை விட்டுப் பிரியும் வரை…
உன் அன்புத் தோழியாய் நான்
என் அன்புத் தோழனாய் நீ!

போடா என்று சொல்லி
பொய்ச் சண்டை போட்டு
மறு நிமிடம்
“மன்னிப்பு” என்னும் பூ தூவி
உயிரின் தீபமேற்றி
உன் உயிரோடு கலக்கும்
உன் தங்கையாய் நான்
என் அண்ணனாய் நீ!

ஒற்றை விரல் கோர்த்து
பற்றிப் படர்ந்து
எனக்காக நீயும்
உனக்காக நானும்
நிறைவான அன்பினில்…

கற்பும் நட்பும்
கண்ணென மதித்து
இறுதி வரை உறுதியாய்
நிஜமான நட்பின் சுவாசிப்புடன்…

நீளும் உன் கரங்கள்
நிஜமென நம்பி…

இரு சிறகுகளிலும்
இருந்த பாரங்களை
இறக்கி வைத்த
சின்னப் பட்டாம் பூச்சியாய் நான்!


உங்களோடு வலம் வரும்
*** இவள் - சத்தியா ***



Tuesday, March 20, 2007

தூக்கம் தொலைத்த இரவொன்றில்...


தூக்கம் தொலைத்த இரவொன்றில்...!
-------------------------------------------------------

ஓ...!
விடை கொடுத்து
உனை வழி அனுப்பி விட்டு
வீங்கிய விழிகளுடன்...

தூக்கம் தொலைத்த இரவொன்றில்
துக்கம் தொண்டையை அடைக்க
தூக்கத்தை தொலைத்து
துடித்துத்தான் போகின்றேன்!

ம்...!
அன்பாய் அரவணைத்து
ஆதரவாய் அமுதூட்ட
அருகே உன் அன்னை!

தோழனாய்
உனை தோள் சாய்க்க
தோழமையுடன் உன் தந்தை!

உயிர் உரசி
உயிர் கொடுக்க
உன் உடன் பிறப்புகள்!

நட்புடன்
கூடிப்பாடி குதூகலிக்கும்
நண்பர்கள் கூட்டம்!

இத்தனைக்கும் மத்தியில்
புன்னகை பூத்தபடி
பூத்திருப்பாய் நீ!

இங்கே...

என் வீட்டு வாசலில்
அழுத்தமாய் அழைக்கும்
அழைப்பு மணி
நீயாக இருக்காது
என்று தெரிந்தும் கூட
அந்தரித்து
உனை தேடி நிற்கிறது
என் ஆத்மா!

ஒரு தடவையேனும்
உன் குரல் கேட்காதா
என்ற ஏக்கம்
எனை வாட்ட...

ஒவ்வொரு தடவையும்
சிணுங்கும் தொலைபேசியில்...

நீயாக இருக்க வேண்டுமென்று
நீண்ட பிரார்த்தனையோடு
மூச்சிறைக்க ஓடிச் சென்று...

ஏமாற்றத் தீயில்வேகி
ஒடிந்துதான் போகின்றேன்!

ம்ம்!
சூரியனின் வட்டப் பாதையை
சுற்றிச் சுற்றியே பழக்கப்பட்ட
பூமிப் பந்தைப் போல...

உன்னையே சுற்றி சுற்றியே
எப்போதும்
வலம் வருகிறேன் நான்!


------நட்போடு------
வலம் வரும் இவள்
-----"சத்தியா" -----


Tuesday, March 13, 2007

பிரிவின் வலி!



பிரிவின் வலி!
---------------------

பிரிவுகளின்
வலி மிகுந்த
இந்த வேளையில்...

உனது பிரிவைத் தாங்காது
எனது உள்ளம்
மெதுவாக அழுகிறது!

பிரிவின் காயங்களால் ரணப்பட்டு
கொந்தளித்துப் போகிறது
இந்த மனம்!

ம்...!
இந்த
சின்ன இதயம்
பிழியும்
சோகங்களை எல்லாம்
எந்த ஆறுதல்கள் அமைதிப்படுத்தும்...?

------நட்போடு------
வலம் வரும் இவள்
-----"சத்தியா" -----

Wednesday, February 14, 2007

அதிசயக் காதல்!



அதிசயக் காதல் !
--------------------------
அடிக்கடி
உன் முகத்தின் முகவரியை
அசைபோட்டுக் கொள்கிறேன்!
பார்ப்போர்
எல்லோர் மீதும்
பாசம் வருவதில்லை!
கண்ணில்
காண்போர் எல்லோர் மீதும்
காதல் வருவதில்லை!
ஆனால் எப்படி
உன்மீது மட்டும்
இப்படி ஒரு காதல்!
என் இதயக் கோயிலில்
காதல் வேதங்கள் ஓதப்பட...
தென்றல் தெம்மாங்கு பாடி
ஊருக்கு அஞ்சல் செய்கிறது!
உன் வாசனைகள்
எனைக் கடந்து செல்கிறது!
ம்...!
இதயத்தின்
ஒவ்வொரு அறைகளிலும்
உன் முகம் பதிகிறது!
தாலாட்டும் பூங்காற்றாய்
தழுவிச் செல்லும்
உன் நினைவால்...
என் அனுமதிகள் எதுவுமின்றி
கற்பனை
நான்கு திசைகளிலும்
எட்டிப் பார்க்க...
மௌனமாய் கருத்தரித்து
விரல் வழி பிறந்து
வழியும் கவிதைகளை
விடிய விடிய
எழுதி முடிக்கிறேன்!
நெஞ்சினில் அன்பையும்
கண்களில் காதலையும்
உள்ளே தேக்கி வைத்து
தளிர் விட்ட காதலை
உன்னிடம் சொல்லி விட...
கற்பனையாய்
ஆயிரம் கவிதைகள்!
கண்ணாடி முன்
ஆயிரம் ஒத்திகைகள்!
இருந்தும் என்ன பயன்...?
உன்னைக் கண்டவுடன்
உயிரெழுத்து எது
மெய்யெழுத்து எது
எதுவுமே தெரியவில்லை!
எத்தனை மொழிகள்
எனக்குத் தெரிந்திருந்தும்
அத்தனை மொழியையும்
மொத்தமாய் மறந்து
ஒரு மொழியும் தெரியாத
பிஞ்சுக் குழந்தையாய் நான்!
ம்...!
இது அதிசயக் காதல்தான்!
------நட்போடு------
வலம் வரும் இவள்
-----"சத்தியா" -----

Saturday, January 13, 2007

உன் ஞாபகங்கள்!


















உன் ஞாபகங்கள் !
*********************
என் கண்களிலிருந்து வடியும்
கண்ணீரின்
வெப்பக் கொடுமையை விட
அந்தக் கண்ணீர்த் துளியில் வரும்
உன் ஞாபகங்கள்
மிகவும் கொடுமையானவை!

நீ பிரிந்திருக்கிறாயா...?
அல்லது
விலகி இருக்கிறாயா...?

எனக்கு
எதுவுமே புரியவில்லை!

ம்...
இப்போது உனக்கு
"விலகல்" பழகியிருக்கும்
ஆனால் எனக்கு...?

------நட்போடு------
வலம் வரும் இவள்
-----"சத்தியா" -----

Tuesday, January 09, 2007

புரிகிறதா நேசத்தின் ஆழம்?












புரிகிறதா நேசத்தின் ஆழம் ?
********************************
பிரிவுகள்தான்
அன்பின் ஆழத்தை
அளக்கும் கருவியாமே...?

பார்த்தாயா
சின்னப் பிரிவிற்குள்
நீ சிதைந்து போனதை...?

இது
உனக்கு மட்டுமல்ல
எனக்கும் சேர்த்துத்தான்
சொல்கின்றேன்.

ம்...
இப்போது புரிகிறதா
என்மீது நீ கொண்ட நேசமும்
உன்மீது நான் கொண்ட நேசமும்
எவ்வளவு ஆழமானதென்று...?

Thursday, January 04, 2007

வரமொன்று நான் வேண்டி!



வரமொன்று நான் வேண்டி !
******************************

உன் விழி வீச்சில்
என் விழி மயக்கி...

உன் வார்த்தை ஜாலங்களால்
என் இதய வாசல் திறந்தாய்!

தூண்டிலில் சிக்கிய மீனாய்
உள்ளம் துடிதுடித்து...

அடங்க மறுக்கும்
புரவியாய்
உன் நினைவில்
தடுக்கி விழுந்து
எழுந்து துடித்து
அழுது தவித்து...

நீ வரும் நேரமெல்லாம்
வரமொன்று நான் வேண்டி
வாசலில் தவமிருக்க...

நீ
வரம்தான் தரவில்லை
சாபங்களையாவது
தூவாமல் செல்!

------நட்போடு------
வலம் வரும் இவள்
-----"சத்தியா" -----